Thursday, 3 November 2011

மதிப்புக்குரிய முதல்வர் அம்மா அவர்களுக்கு,

மதிப்புக்குரிய முதல்வர் அம்மா அவர்களுக்கு,
தாவுநீர்க் கடலைப் போல்
தண்ணருள் அலைகள் பொங்கும்
சந்திரப் பிரப்பூங் கண்ணி
சற்றுநீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்போம்
மின்னிடும் விழிகள் காண
விழைந்தனோம் போற்றி ! போற்றி !
(-ஆதிசங்கரர், தமிழில் கண்ணதாசன் )
மாலவன் மார்பிலாடும் திருமகள் தாங்கள் எண்ணத்தின் நற்செயல்கள் யாவும் ஆக்கம் பெற தமிழகத்தை செல்வமயமாக்கி இன்னருள் புரிய பிராத்திக்கிறேன். . .

சென்னையில் உள்ள “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை", குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றத் தாங்கள் முடிவெடுத்து இருப்பதாகச் செய்தி அறிந்தேன்! இது நிச்சயம் நடந்துவிட கூடாது அம்மா!
நான் தற்போது லண்டன் நகரத்தில் வசித்து வருகிறேன்,இங்கு உள்ள நவீன நூலகங்களுக்கு எந்தவிதத்திலும் மாற்று இல்லாத சிறந்த கட்டமைப்பு மற்றும் வசதிகள் கொண்ட நூலகம் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’.
முன்னர் நீங்கள் அதிநவீன தலைமைச் செயலகத்தை மக்களின் பயன்பாட்டுக்கு பன்முனை மருத்துவமனையாக பணித்த பொழுது தங்களின் தலைமையை எண்ணி மகிழ்ந்த அதே உள்ளம் இன்று அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் செய்தி அறிந்து துடிக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தின் உட்கட்டமைப்பு எந்த ஒரு வகையிலும் மருத்தவமனைக்கு ஒவ்வாது.
கடந்த ஆட்சியின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து என்னை போன்ற இளைஞர்கள் தங்களுக்கு ஆதரவு பரப்புரை நிலைப்பாட்டை எடுக்க துணிந்து அவ்வண்ணம் செய்தமைக்கு எங்களின் வாசிப்பு மற்றும் படித்தலின் மூலம் பெறப்பட்ட பகுத்தறியும் தன்மை தான். அந்த அறிவு இன்று நீங்கள் எடுத்த நிலைப்பாட்டை வேதனையும் ஏமாற்றமும் நிறைந்து பார்க்கிறது.
இந்த நூலகம் ஏற்கனவே பல ஆயிரம் மக்களுக்குச் சேவை செய்துவருகிறது மேலும் தங்களின் ஆட்சி திறமையை பெரிதும் வியந்து பாராட்டிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு, அங்கே உரையாற்றுகிறபொழுது “ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலமாக இது அமைந்திருக்கிறது” என்று பாராட்டிச் சொன்னார் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன். இத்தனை மேன்மைகள் நிறைந்த இந்த நூலகத்தை இடம் மாற்றாமல், புது இடத்தில் மருத்துவமனையைக் கட்டவேண்டும் என்று கோருகிறேன்!

தமிழக மக்கள், தங்கள் மேல் மிகுந்த மதிப்பும் அதீத நம்பிக்கையும் வைத்துள்ளார்கள் என்பது கடந்த உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தல் மூலம் தாங்கள் அறிந்ததே!
சிறந்த படிப்பாளர் மற்றும் வாசிப்பாளரான நீங்கள், நூலகத்தையும் காப்பாற்றி, குழந்தைகள் நலத்தையும் பேணிப் புகழ் பெற வேண்டும் என்று இரைஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
                                               தங்கள் உண்மையுள்ள
                                                   கண்ணப்பன்
Kannappan Shanmuganathan
Block M1, 69F,Forty Lane,
Wembley Park,
London - HA9 9UJ.
+447771303532

No comments: