Monday, 16 September 2013

மதுரையில் அணுக்கழிவு ஆய்வு மையம். . .!!??



மதுரை வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்க பாபா அணு சக்தி ஆராய்ச்சி கழகம் மூலம் டெண்டர் விடப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்தியாவின் தவறான அணுசக்தி அனுகு முறையை தீவிராமாக ஆராய்ந்து வரும் வல்லுனர்கள் மத்தியில் இந்த நிகழ்வு 2 சாத்தியங்களுக்காக இருக்கலாம் என்று முன் மொழியப்படுகிறது அவை

1. அணு உலை உள்ள நாடுகள் தங்கள் அணுக்கழிவுகளை Deep Geological Repository என்று சொல்லப்படுகிற பூமிக்கடியில் வெகு ஆழத்தில் புதைக்கும் மையங்களை கொண்டு இருத்தல் வேண்டும், இதுவரை இந்தியாவிடம் இப்படி ஒரு மையம் இல்லை என்பது கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் வெளிகொனரபட்டது அதன் பிறகு கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் அமைக்கலாம் என்ற முதற்கட்ட ஆய்வின் போதே அந்த பகுதியின் அனைத்து மக்களும், அனைத்து கட்சிகளும் (காங்கிரெஸ் மற்றும் பா.ஜ.க உட்பட) ஒருமித்த குரலுடன் எதிர்த்து செய்யப்பட்ட பெறும் போராட்டங்களினால் அந்த திட்டம் கைவிடபட்டது. . .அந்த கைவிடப்பட்ட திட்டமே மதுரை வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் என்ற பெயரில் அமைக்கபடுவதாக இருக்கலாம்.

2. கதிர் வீச்சின் அளவை அறியக்கூடிய டிடெக்டர் லேபரட்டரிக்காவும் இந்த டெண்டர் விடப்பட்டு உள்ளது எனபடுகிறது. இது நிச்சயமா கூடங்குளத்தில் விபத்து நிகழ்ந்தால் அல்லது இயல்பாகவோ அங்கு இருந்து கதிர்வீச்சு மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பரவும் சாத்தியங்களை உறுதி செய்கிறது.

நமது வாழ்வாதாரங்களின் பாதுகாப்பை நாம் தான் சிந்திக்க வேண்டும் எந்த ஒரு காலத்திலும் ஆட்சியாளர்களோ அல்லது ஆணவமும் லாப நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் சிந்திக்க. . .!!?? ஏன் கருத கூட மாட்டார்கள்.

Saturday, 27 July 2013

வாலி நீ என்றும் வாழி !!!!






இனி யாரிடம் கேட்போம்
எடுத்த மொழி
அடுக்கி வரும்
மிடுக்கின் தமிழை. . .?

இனி யாரிடம் பருகுவோம்
தொடையும் சந்தமும்
எதுகையும் மோனையும்
துளிர்த்து வரும்
இன் தமிழ் அதகத்தை. . .?


இனி யாரிடம் பார்ப்போம்
செம்மாந்த நடை 
பொறையாரந்த நிலை
இறையார்ந்த சொல்
அருவி வரும்
என் தமிழ் அருவியை. . .? 

முருகா
இவரின் உயிர்
உன் இணையடி தாமரையில்
இளைப்பாற இறைஞ்சுவதர்க்கு
என் நலம் தடுக்கிறது. . .
இவரை மீள்வித்து
மீண்டும் பிறக்கச்செய்
நின் தமிழை
நிகரில்லாமல் நிகர்க்கச் செய்

வாலி நீ என்றும் வாழி!!!!!

Sunday, 14 July 2013

இரசவாத உண்மை

சோழிகள் உருளும்
ஜதி
மின்னல் பூக்கும் ஒளி
சிரிக்கவில்லை 
சிறுகச் சிறுக
சிதைக்கிறாள் என்னை. . . 

இரசவாத உண்மை
 
உன் 
மாதுள மணி நிற உதடுகளுக்கு 
பின் 
ஒளி(ர்)ந்து விளையாடுகிறது. . . 

திமிர் பிடித்தவள் என்கிறாள் 
உன் தோழி 
யாருக்கு தான் இவளை பிடிக்காது?!
பாவம் "திமிர்" 
என்கிறேன் வெகுளியாக. . . 



Sunday, 23 June 2013

ஜூன் 24 கவியரசரின் பிறந்தநாள்


எட்டு வார்த்தை கொண்ட வாழ்த்துக்கு
எதுகைக்கும் மோனைக்கும்
இரவெல்லாம் ஏங்கி
விழி இரண்டும் விழித்தும் சிவந்தும்
வெற்று காகிதத்தை வெறித்து பார்க்கையில். . .
சற்றும் யூகிக்க முடியாத,
விண்ணுக்கும் மண்ணுக்கும் விரித்தாலும் கொள்ளாத
காதலாய் காமமாய்
இறையாய் தத்துவமாய்
பெறும் இன்பமாய் இருந்தது இவன் தமிழ். . .

மதுவில் திழைத்து வந்த வரிகள்
என்று
குடித்து விட்டு வாந்தி எடுக்கும்
தற்குறிகள் தர்க்கத்தை எண்ணுகிறேன். .
பாவத்தின் மது
செய்த புண்ணியம்
கவிஞனின் உடலில் இருந்தது.,
கவிதைகள்
அவனுள் இருந்தது. . .!!!!
அது
தீரா திழைப்பு. . .
பரிணமித்த
பாரதியின் பாதச்சுவடு. . .!

இக பரம் இரண்டுக்கும்
இறைவன் முருகன்
இதை எடுத்தாண்டதால் தானோ
இவன் இந்தமிழும்
எனக்கு முருகு. . .!!!

கண்ணதாசன்

அவனின் தாசன்


Thursday, 2 May 2013

காற்று. . .!!!


உரு இல்லாத காற்று
உன்
கருங்கூந்தல் உடனான சரசத்தில்
உயிர்க்கிறது என் காதல். . .

உயிர் காற்று
நெருப்பின் தேவை
எத்துனை உண்மை. . .!
உன்
உயரின் காற்றல்லவா
என்னில் தழல்கிறது. . .

மெல்லியது காற்று,
மிகை மெல்லியது
நுதல் வழி விழி தொடும்
உன்
முன் கூந்தல். . .

எதிர் வரும் காற்று
உன்
கேச ஸ்பரிசத்திர்காக. . .

சூழும் காற்றில்
சுழலும் நினைவில்
-கண்ணப்பன்

Monday, 10 September 2012

பேரழிவுக்கான வித்து




கூடங்குளம் அணு உலை மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தின் அமைப்பில் உருவாக்க பட்டது, மிகவும் பாதுகாப்பானது, ஆயிரம் மெகவாட் மின்சாரம் உருவாக போகிறது, நாடு இதன் மூலம் மகோன்மத நிலையை அடையபோகிறது இப்படி பட்ட அதிசய நிகழ்வை 17,000 கோடி செலவில் உருவாக்க பட்ட அக்க்ஷய பாத்திரத்தை வீனடிக்கலாமா. . .? என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சியை சேர்ந்தவர்கள், தினமலர் உள்ளிட்ட சில பத்திரிகைகள், அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகள் வரிந்து கொண்டு அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது இந்த அரசை மூர்க்கமாக தாக்குவதற்கு மறைமுகமாக INFLUENCE செய்து கொண்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க என்ன நடந்தால் என்ன, எவன் வீட்டில் எளவு விழுந்தால் எனகென்ன, அணு உலை ஆரம்பித்து மின்சாரம் பெற்று அதன் மூலம் என் அடியில் வேகும் வேக்காட்டை ஆசுவாசப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று புதியதலைமுறை செய்திக்கு கருத்துகணிப்பு வாக்களித்து கொண்டு இருகின்றனர் நம் தமிழ்ச்சமுகத்தின் பெரும் பகுதியினர். 
இவர்களை எல்லாம் அரசாலுகிற “மாண்பு மிகு புரட்ச்சித் தலைவி அம்மா” (பழக்க தோஷம், விடுங்கப்பா!) மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் தன்னோட மூர்க்க மற்றும் ஆணவ குணத்தாலும்,கேடுகெட்ட அட்வைஸ் குடுக்கும் அப்பறசெண்டிகளின் பேச்சை கேட்டும், எப்போது ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறைக்கு அதீத அதிகாரத்தை கொடுத்து, அவர்களும் ஐயா ஆட்சியில் வட்ட செயலாளர் வண்டுமுருகனின் பிஎ களிடம் கூட  கெட்டவார்த்தையால் திட்டு வாங்கிய கடுப்பில் அறவழியில் போராடுகிற மக்கள் மீது தடியடி நடத்தி தங்களது வீரத்தையும் பராக்குரமத்தையும் மீள்கொனர்ந்து பாலாக்கி கொள்கிறார்...!
அப்போ நம் போன்ற வளரும் நாடு வளர்வதற்கு என்ன தான் வழி ? அணு தானே மலிவாய் கிடைக்கிறது, உண்மையா இல்லையா என்றால், உண்மைதான். அனல் உலையை காட்டிலும் மலிவானதுதான் ஆனால் அதேசமயம் சிறு தவறு நேர்ந்தாலும் ஏற்படும் விபத்தின் விளைவு அதிகொடூரமானது. ‘தவறு எல்லாம் நேராது என்று விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் சொல்லிவிட்டார்களே’ என்று வீராவேசத்துடன் தமிழக மக்களின் நலம் காக்கும் காங்கிரசின் வாழும் வேலுநாச்சியார் என்ற நினைப்பில் விஜய தாரணி கேட்கிறாரே. . .? இதற்க்கு பதில் கூறுவதற்கு முன்பு வள்ளுவர் சொல்லியபடி இடுக்கண் வரும்கால் நகுகிறேன்.       
 
அதிகாரிகள். . . .???? எளவு வியாபாரம் செய்பவர்கள் (சிலர் விதி விளக்கு). கட்டுபடுத்தகூடிய இரசாயன வெடிமருந்துகளின் மூலம் விளையும் விபத்தை கூட கட்டுபடுத்த திராணி இல்லாமல் ஆண்டுகொருமுறை பட்டாசு தொழிலாளர்கள் செய்த வெடி வெடிக்கிறதோ இல்லையோ விபத்து வெடித்து எண்ணற்ற உயிர்கள் போனபின் விபத்து தடுப்பு குழு அமைத்து தங்களை குளிர்வித்து கொண்டு இப்போது மீண்டும் 56 பேரை காவு வாங்கிய பின்பும் மீண்டும் ஆய்வு குழு அமைத்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறிது பிசகினாலும் ஏற்படும் விபத்தின் தாக்கம் மிக கொடூரமாக உயிர் மூலக்கூரில் சந்ததி தோறும் நிலத்து நின்று ஊனத்தை விளைவிக்க கூடிய ஆபத்தை நம் சுகத்திற்காக அந்த பகுதி மக்கள் தலையில் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்.

 இந்த அரசுகள் அந்த மக்களுக்கு அதைமட்டுமா சொல்லுகிறது. அவர்களுக்கு பயப்படுவதற்கு உரிமை கொடுத்தது யார் என்று அடிக்கிறார்கள். அணு உலையில் இருந்து வெளியேறும் நீரின் வெப்ப நிலை 47°C, அப்படி வெளியேறும் நீரின் தன்மையினால் நிச்சயமாக சுற்றுவட்டார கடல் பகுதியின் மீன்வளம் பாதிக்கும். மீன் பிடி தொழிலை ஆதாரமாக நம்பி வாழும் மீனவர்கள் கடலுக்குள் வெகுதூரம் சென்றால் இல்லாத எல்லையை தாண்டி விட்டதாக கடந்த சில ஆண்டுகளில் சிங்களவன் கொன்ற மீனவர்கள் எண்ணிக்கை 550 ஐ தாண்டும், அடிபட்டு பொருள் இழந்தவர்கள் கணக்கில் அடங்காதவர்கள். கேரள அரசாங்கம் தங்கள் மாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க வருபவர்களிடம் வரி போடலாமா என்று திட்டம் தீட்டி கொண்டிருக்கையில் அந்த மக்கள் என்னதான் செய்வார்கள் ? எந்நேரமும் சாவையும் ஸ்திரத்தன்மை இல்லாத வாழ்வையும் எதிர்நோக்கி இருக்கும் மக்கள் போராடத்தான் செய்வார்கள்.
அவர்கள் அனுமதி இல்லாமல் அங்கு அணுஉலை நடத்தினால் அது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். அக்கறை அற்ற மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரிகளை கொண்டு தொடர்ந்து விபத்து வரலாறை சந்தித்து வரும் தமிழ்நாட்டில், அணு உலையை நிர்மாணித்த ரஷ்யா கம்பனி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு ஏதும் தர சம்மதிக்காத (மறைமுகமாக விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதை உறுதி செய்யும் விதம்) நிலையில் தமிழ் நாட்டில் அணு உலை என்பது பேரழிவுக்கான வித்து என்பதை தவிர வேறு எந்த உண்மையும் இருக்க முடியாது.
(படங்கள்: www.google.com)

Tuesday, 24 July 2012

நாளைய ஒளிர்வு. . .

பாதைகள் எங்கும்
மின்னூட்டங்கள் வியாபித்திருந்தது
கிரகித்துகொண்டேன்.

நாளைய எந்தன் ஒளிர்வின் 
பிரம்மாண்டத்தை 
இன்றே  உணர்ந்து

வளரவிடாமல் வெட்டப்பட்ட 
தாவர வேலிகள்,
அதன் பின்னுள்ள அலங்கார மலர்கள்,

ஆலவட்டதின் அயர்வில்
அசையாது நிற்கும் வீதி மரங்கள்,

பசுமையான புல்வெளியுடன் தொடங்கும்
காடுகள்,

அந்திமயங்கிய வானவிதானத்தின்
அழகுச் சூரியன்,

செடிகளுக்கு தண்ணீர் விடும் 
மூதாட்டியின் என்மீதான 
அனுதாபப் பார்வை,

அறிமுகம் இல்லாத 
வெள்ளைகார பெரியவரின் 
சிரிப்பு,

பி.சுசீலாவின் "அமுதை பொழியும் நிலவே"
பாடல்,

வாழ்த்துகள் சொல்ல


பெருமிதத்தில்
நண்பர்கள் நிறைந்த வீடு திரும்பி 
சோ(அ)கமாய் அமார்கிறேன். . . !






Saturday, 24 March 2012

திருப்புறவார்பனங்காட்டூர் - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். . .


நீடல் கோடல் அலரவெண் முல்லை
நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே
-திருஞான சம்பந்தர்
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,

                                வணக்கம், இறைவனின் மாரில்லாத கருணையின் வெளிப்பாட்டால் தங்கள் ஆட்சியில் தமிழகம் வளமையும், அன்பும், ஆனந்தமும் பெருக வேண்டும் என்று எம்பெருமானின் திருவுலத்தை பிராத்திக்கிறேன்.
 மேற்ச்சொன்ன பாடல் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரால் “திருப்புறவார்பனங்காட்டூர் ஸ்ரீ புறவம்மை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீசர் பெருமான் திருவருள் நோக்கி பாடப்பெற்ற தேவாரப் பாடல், நாளும் தில்லையாலும் ஞானமா நடராச மூர்த்தியின் திருவருளை எண்ணி உள்ளம் உருகி விழி செருக வழிபடும் சிவனடியார் பெருமக்கள் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் யாவையும் திரு கைலைக்கு பொருந்தி வழிபடுவார் என்பதை ஆன்மீக ஞான மார்க்க வழிதேடும் நீங்கள் அறியாததொன்றுமில்லை, அப்படி இருக்க தங்கள் மேன்மை மிகுந்த ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்தின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற பணயபுறம் (திருப்புறவார்பனங்காட்டூர்) திருப்பனங்காட்டீசர் பெருமான் திருக்கோவிலை நெடுஞ்சாலை அமைக்கும் பொருட்டு, இடித்து அகற்ற போவதான செய்திகேட்டு இதயம் ஒருங்கிய நிலை அடைந்துள்ளோம். அறிவின் மேன்மை பொருந்திய பொறியாளர் பெருமக்கள் தங்கள் அனுபவ மேன்மையால் வேறு ஒரு பாதை கொண்டு சாலை அமைக்க முடியும் ஆனால் எதிர்த்து செய்ய பனி ஒன்று அறிந்திடாத ஏழை நாங்கள், சூது தவிர்த்து சிவநெறி தலைத்து ஓங்கச் செய்த ஞானசம்பந்த மூர்த்தி ஸ்வாமிகள் பாடிய 1000 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஸ்தலத்தை எங்கனம் மீள்கொனர்வோம் ? நெடுஞ்சாலைக்கு மற்றுப் பாதை அமைக்க வழி வகை செய்து அடியார்கள் இதயம் ஆனந்தமுற நீங்கள் நல்லதோர் நடவடிக்கை மேற்கொண்டு அடியார்க்கு அடியானின் திருவருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று மன்றாடி வேண்டிகொள்கிறோம்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

என்றும் தங்கள் கீள்படிந்துள்ள
கண்ணப்பன் 





(படங்கள் : http://www.shaivam.org )





Wednesday, 21 March 2012

அணு(கு) முறை. . .!



ஆயிரம் தான் சொன்னாலும் தற்போதைய சூழ்நிலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தியா போன்ற வளரும் நாட்டில் அணு மின்சாரத்தின் தேவை நிச்சயம் தவிர்க்க இயலாதது. . .! அதே சமயம் அதில் உள்ள ஆபத்தும் மறுக்க முடியாதது, அதில் இருந்து வெளியேறும் கதிரியிக்கம் நிறைந்த நீரினால் மீன் வளம் குறையும் என்ற மீனவ மக்களின் வாதம் இயல்பானதும், அவர்களின் வாழ்வாதார சம்பத்தபட்டதும் கூட. . .!மீன் கிடைத்தால் தானே அவர்கள் அதை குளிர் பதனிடு(cold storage) அறையில் சேமிக்க இயலும் ?

 இப்படி உள்ள சூழ்நிலையில் கூடங்குளத்தில் சாலைகள் போடுவதை போன்ற "இனாம்" அரசியலை தவிர்த்து அதில் வெளியேறும் நீரின் தரத்தை மேம்படுத்தி வெளியேற்றுவதற்கு அனைத்துலக (மறுபடியும் இந்திய அணு விஞ்ஞானிகள் அல்ல...!) சூளியில் வல்லுனர்கள் மற்றும் அறிஞர்களை கொண்டு ஒரு புது நீர் மேம்பாட்டு சுத்திகரிப்பு நிலையத்தையோ அல்லது ஏற்கனவே உள்ளவற்றில் மாறுதல்கள் கொண்டோ வடிவமைக்கலாம். . .! அது மட்டும் அல்லாமல் 20 வருடங்களுக்குள் இந்த அணு மின்நிலையத்தை மூடுவதற்கான உறுதி மொழி  ஒப்பந்தத்தில் முதல்வர், பிரதமர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு அந்த சமூகத்திடம்  வழங்குதல் வேண்டும். . .! நேர்மையாக சொல்கிறேன் முதல்வர் (திரு.ஜெயலலிதா ) போன்ற சிறந்த நிர்வாகிக்கு இயற்கை சார் மின் மேம்பாடு திட்டத்தை செளுமைபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு 5 வருடமே அதிகம் தான். . .!

இத்தகை நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து அதிகார பலத்தை ப்ரோயோகித்து அந்த மக்களின் வைற்று எரிச்ச்சலை பெரும் பட்சத்தில். . .முதல்வரை  நல்லோர் சமூகம் திரு.செல்வி ஜெயலலிதா என்று அழைக்கும் மாண்பை விடுத்து "பொம்பள அழகிரி" என்று அருவருப்போடு அழைப்பார்கள் என்பது நிச்சயம் . . .!

 


 




பின்குரிப்பாக சில கோரிக்கைகளை சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். . .
நாராயண சாமி, சுப்பிரமணிய சாமி, சோ. இராமசாமி குருமூர்த்தி, தினமலர் அதிபர், தினமலர் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் ப.சிதம்பரம் யாவரும் இந்த 20 வருடத்திற்கு தங்கள் மனைவி, பிள்ளை குட்டி மற்றும் பேரன் பேத்திகளோடு "பாதுகாப்பான" அணு உலைக்கு அருகாமையில் வாழ்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் இந்த பகுதி மக்களுக்கு அணு உலையின் பாதுகாப்பின் மேல் நம்பிக்கை வருவதோடு அவர்கள் யாவரும் உண்மையை நிரூபித்து காட்டும் சத்திய சீலர்கள் என்று சில அறிவிலிகளுக்கு(நான் உள்பட) புரியம் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன். . .!
- கண்ணப்பன்
(படங்கள் : google.com)

Wednesday, 15 February 2012

சுகந்தம். . .

பொருந்திச் சொல்ல
மலர் ஒன்று இல்லாத
சுகந்தம். . .
சுவாச காற்றினுள் சுழல்கிறது,
இடைவெளி இளைக்கிற தருணங்களில். . .!